ரேஷன் அரிசி கடத்தலை மடக்கிய போலீசார்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் கடை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு விற்பனையாவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் பண்ருட்டி சீலைக்காரத் தெருவிலுள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக லாரியில் அரிசி மூட்டைகளை ஏற்றி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த பண்ருட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் லாரியிலிருந்த 13 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதனுடைய மதிப்பு ரூபாய் 4 லட்சம் ஆகும்.
அரிசிக் கடத்தலுக்கு உதவியாக இருந்த ரவி என்பவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு அரிசியைக் கடத்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். எந்தப் பகுதியில் பணியில் நியமிக்கப்பட்டாலும், மக்கள் பக்கம் நின்று சட்டத்தின் வலிமையைக் காட்டும் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் இப்போது பண்ருட்டியில் தெறிக்க விடுகிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.
-சுந்தரபாண்டியன்
எல்லைச்சாமியான தமிழக வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
ஜம்முவில், பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவவீரர் மதியழகனின் உடல் ஜூன் 6-ஆம் தேதி அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் இடைப்பாடியருகேயுள்ள சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் வெற்றிலைக்காரன்காடு. இவ்வூரைச் சேர்ந்த பெத்தா கவுண்டரின் மகனான மதியழகன், இந்திய ராணுவத்தில் 17-வது மெட்ராஸ் படைப் பிரிவில் ஹவில்தாராக பணியாற்றிவந்தார்.
இவர் கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று ஜம்மு யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் ராணுவத்தினருடனான துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை யடுத்து அவரது உடல் தனி விமானத்தில் கோவைக்கும், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
மதியழகனின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் மதியழகனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மதியழகனின் மனைவி தமிழரசிக்கு 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர் எம்.ஏ. படித்துள்ள தனக்கு அரசு வேலை ஏதாவது கொடுத்துதவினால் தனது குடும்பத்துக்கு உதவியாக இருக்குமென தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் தமிழரசி.
-இளையராஜா
கொரோனா பீதியில் அ.தி.மு.க. அமைச்சர்- தி.மு.க. எம்.எல்.ஏ!
அமைச்சர் ஒருவருக்கும் எம்.எல்.ஏ. ஒருவருக்கும் ‘அதுவாமே?’ என்று விருதுநகர் அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஒருவர் மட்டும்தானே அமைச்சர்? அவருக்கு என்னவாம்? நிவாரண உதவி வழங்குவதற்காக மக்களைச் சந்தித்தபடியே பிசியாக இருக்கிறார் அல்லவா? உடல் அசதியோடு காய்ச்சலும் எட்டிப் பார்த்திருக்கிறது. அவரது விசுவாசிகள் பதற்றம் அடைந்து ‘கொரோனாவாக இருக்குமோ?’ என்று கேள்வி எழுப்ப, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ‘நெகடிவ்’ ரிசல்ட் வந்தபிறகே, "அப்பாடா' என்று பெருமூச்சு விட்டதோடு, "தர்மம் தலைகாக்கும்...'’என்று பாடவும் செய்துள்ளனர்.
அப்படியென்றால் எம்.எல்.ஏ.? ஆம். விருதுநகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசனை, கடந்த 10 நாட்களாக யாரும் பார்க்க முடியவில்லை. கலைஞர் பிறந்தநாள் விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளிலோ, கலந்துகொள்ள வேண்டிய திருமணங்களிலோ கூட, எம்.எல்.ஏ. தலைகாட்டவில்லை. அதனால், கொரோனா என்றும் எம்.எல்.ஏ. தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் ஊரே கிசுகிசுக்க, அவரது உறவினர்களோ, ""யூரினல் இன்ஃபெக்ஷன்.. ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்... ஓய்வில் இருக்கிறார்'' என்கிறார்கள்.
கொரோனாவை போலவே, அதுகுறித்த வதந்தியும் வேகமாகத் தான் பரவுகிறது!
-அதிதேஜா